குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ராமநாதபுரம்

தேர்தல் வாக்குறுதிப்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை அப்படியே விட்டால் அதனுடைய விளைவுகள் மோசமாகி விடும். எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராமேசுவரத்தில் மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் அவருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் நிவாரண தொகை இதுவரை கிடைக்கவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. என்றாலும் தேர்தல் வாக்குறுதிப்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர படுத்துதல் போன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தீவிரமாக கையில் எடுத்த அரசு அதனை விரைந்து முடிக்காமல் பாதியிலேயே நிற்கிறது. கோர்ட்டு தற்போது விசாரிக்க தடையில்லை என கூறி உள்ளதால் விரைந்து விசாரித்து தவறு செய்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

வாபஸ் பெற வேண்டும்

அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தினை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து முழு அளவில் நெல் கொள்முதல் செய்ய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். அ.தி.மு.க.வில் தற்போது மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் தலைமை யார் என்ற அதிகார போட்டியில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனை அந்த கட்சி தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க.வில் அதிகார போட்டியை 2 பக்கமும் தூண்டிவிட்டு பா.ஜ.க. அதில் குளிர்காய்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க. வரும் தேர்தலில் 25 எம்.பி.க்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறுவது கேலிக்குரியது. அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகள் ராணுவ பணி என்பது உள்நோக்கம் கொண்டது. எனவே, அந்த திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.


Next Story