அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; கலெக்டர் பேச்சு


அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; கலெக்டர் பேச்சு
x

பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஒன்றியம் கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மக்களை தேடி மருத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டமானது சிறப்பான முறையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக நமது மாவட்டத்தில் 10 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுளோம். குழந்தைகளுக்கு கற்றல் கற்பித்தல் திறன் சிறப்பான முறையில் இத்திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் பெண்கள் அதிகம் படித்து முன்னேற வேண்டும் என்பதன் அடிப்படையில் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பணிகளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், சிமெண்டு சாலைகள், பக்க கால்வாய்கள் அமைப்பது போன்ற பல்வேறு பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

இதனை தொடா்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டு, மகளிர் திட்டம் மூலம் அமுதசுரபி நிதியில் இருந்து 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் நிதியும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கேந்தி நாற்று மற்றும் வெண்டை விதைகளையும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ஈடுபொருட்களையும் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், வேளாண்மை துறை இணை இயக்குநர் பாலா, செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story