அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ள செல்போன் செயலி விரைவில் அறிமுகம்
அரசின் நலத்திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
அரசின் நலத்திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
கோவை பீளமேட்டில் உள்ள டைடல் பார்க் பகுதியில் ரூ.115 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்பத்துறை அனைத்து திட்டங்களையும் தெளி வாக திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் சேவைகள் மின்னணு முறையில் வழங்கும் பணி 6 மாதத்தில் முடிந்துவிடும்.
அதன் பின்னர் தமிழகம் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும்.
தற்போது இங்கு ரூ.115 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிந்து விடும். இதன் மூலம் 15 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
செல்போன் செயலி
இ-சேவை தான் அரசின் அத்தனை திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து செல்ல உதவுகிறது. இதில் அடுத்த கட்டமாக சிட்டிசன் போர்ட்டல் என்ற செல்போன் செயலியை உருவாக்கி அனைத்து திட்டங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விரைவில் வழங்க உள்ளோம். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
2-வதாக அரசு அலுவலகங்கள் அனைத்தையும் எலக்ட்ரானிக் மயமாக மாற்ற உள்ளோம். இதன் மூலம் டேட்டா என்டிரி எனப் படும் தரவுகளின் அடிப்படையிலான அரசாக திகழும். பல திட்டங்களின் பயன் முறையான பயனாளிகளுக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் இருக்கிறது.
முறையான பயனாளிகளை தேர்வு செய்ய இந்த தரவுகள் உதவும். இதன் மூலம் தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யும்போது சேலம் மாவட்டத்தில் முறைகேடு நடந்ததை கண்டுபிடிக்க முடிந்தது.
2-வது இடம்
தமிழகத்துக்கு வரக்கூடிய ஐ.டி. நிறுவனங்களுக்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இ-சேவை மையம், பத்திரப்பதிவு மையங்களில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இ-சர்வீஸ் பயன்பாட்டில் நமது மாநிலம் 17-வது இடத்தில் இருந்து தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.