பொய் சொல்லி அதை மெய்யாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்


பொய் சொல்லி அதை மெய்யாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்
x

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. பொய் சொல்லி, அதை மெய்யாக்குவதற்கு முயற்சிப்பதாக ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராணிப்பேட்டை

சி.பி.ராதாகிருஷ்ணன்

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் மகாதேவமலை கோவிலுக்கு ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். அவருக்கு மகானந்த சித்தர் வரவேற்பு அளித்து, கோவில் பிரகாரங்களை சுற்றி காண்பித்தார்.

பின்னர் கோவிலில் தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை தாக்கல் செய்தது தி.மு.க.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் அரசியல் சாசனப்படிதான் கவர்னர் நடந்துகொள்ளமுடியும். அப்படி செயல்படுவதை குறைகூறுவது எந்த வகையில் தர்மம் ஆகும். நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்..

அதே நேரத்தில் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு வழங்கியது.

இதில் பிரதமரையோ, தமிழக கவர்னரையோ குறைசொல்ல என்ன இருக்கிறது.

நிறைவேற்ற வேண்டும்

இதே தி.மு.க.வினர் பிரதமரை சந்திக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று மனுகொடுக்கிறார்கள். மோடியா இவர்களை தேர்வுசெய்கிறார்?. திறமையானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வே கூடாது என்று ஓட்டுக்காக சொல்லிவிட்டு இன்றைக்கு தேர்ச்சியே இல்லை என்பது எப்படி நியாயம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் கூறிஇருந்தார். அப்படியென்றால் மாநில அரசை தலைமை ஏற்று நடத்துவோர் தானே நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மெய்யாக்குவதற்கு முயற்சி

தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது அறிவை உபயோகப்படுத்தவேண்டும். எது சாத்தியம்?, எது சாத்தியம் இல்லை? என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். வெற்றி பெற்று விடுவோம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ரூபாய்க்கு 3 படி அரிசியிலேயே தி.மு.க. இன்றும் தொடர்ந்து பயணிப்பது வேதனைக்கு உரியது. பொய்யை சொல்லி அதை மெய்யாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் கூறினார். இன்னும் 25 ஆண்டுகளுக்கும் இதையேதான் கூறுவார் என்றார்.

அப்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, தலைமை இடத்து துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகானந்தசித்தர் இருவரும் தேரில் அமர்ந்தபடி மலைக் கோவிலில் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் புடைசூழ வலம் வந்தனர். அப்போது அண்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உலகிலேயே உயரமான 121 அடி உயர மகாசூலத்தை கவர்னர் பார்வையிட்டார்.

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்

கொண்டாவை அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலிலும் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 4.30 மணி அளவில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் அலுவலக ஊழியர்கள் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்தார்.

யாகசால மண்டபத்தில் கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story