கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு


கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு
x

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்கள பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிக அளவில் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனைகள் நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகள் அதிக அளவில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான அறிவிப்பான பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திடவும் வேண்டும்.

மேலும் தமிழக விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் பனை மற்றும் தென்னை கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராம், மானூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுடலை மாரி மற்றும் நெல்லை பகுதி துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கணவரை மீட்க வேண்டும்

பணகுடி முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக செல்வி, கண்ணீருடன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

என்னுடைய கணவர் ஆறுமுகம் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் கரூரில் தங்கி இருந்து வேலை செய்ய போவதாக கூறிவிட்டு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவரை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுத்து, மீட்டு தர வேண்டும்.'' என்று கூறிஉள்ளார்.

பர்கிட் நூற்றாண்டு

பாளையங்கோட்டை அருகே பர்கிட் மாநகரை சேர்ந்த வக்கீல் பரம சிவகுமார் கொடுத்த மனுவில், ''1923-ம் ஆண்டு முதல் 1925-ம் ஆண்டு வரை நெல்லை மாவட்ட கலெக்டராக ஆர்.ஆர்.பர்கிட் என்பவர் இருந்தார். அப்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு பர்கிட் இலவமாக வீட்டு மனைகளை வழங்கினார். மக்கள் அங்கு வீடு கட்டி குடியேறியதுடன், அந்த ஊருக்கு கலெக்டர் பர்கிட் பெயரை சூட்டி, இன்று பர்கிட் மாநகரம் என்று விளங்குகிறது. சமூக நல்லிணக்கத்துடன் திகழும் இந்த ஊர் உருவாகி 100 ஆண்டுகள் ஆவதையொட்டி அரசு விழாவாக கொண்டாட வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.

இதேபோல் பல்வேறு பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் 15 பேருக்கு ரூ.87 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிகண்ணு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story