சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு


சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் இருந்து தேனிக்கு சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி

தேனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இதையடுத்து பெரியகுளத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 ஆகியவை தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 மாற்றப்பட்டதற்கு பெரியகுளம் அனைத்து சங்கங்கள், கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சார் பதிவாளர் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அனைத்துக்கட்சி, சங்கங்கள் சார்பில் பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட பத்திர எழுத்தர்கள் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில், நகர்நல சங்கம், வியாபாரிகள் சங்கம், பத்திர எழுத்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வடுகப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் அழகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ்வாணன், அ.தி.மு.க. நகர பொறுப்பாளர் பழனியப்பன், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த இணை சார் பதிவாளர் அலுவலகம் 1-ல் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பத்திரப்பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. எனவே அவற்றை பெரியகுளம் சார் பதிவாளர் அலுவலகம்-2க்கு மாற்றம் செய்ய வேண்டும். அத்துடன் அலுவலகம்-2ஐ ஏற்கனவே செயல்பட்டு வந்ததுபோன்று பெரியகுளம் சார் பதிவாளர் அலுவலகம் என்று செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள் பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


Related Tags :
Next Story