விபத்துகளை தடுக்க சாலை அகலப்படுத்தப்படுமா?


விபத்துகளை தடுக்க சாலை அகலப்படுத்தப்படுமா?
x

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட திருச்செங்கோடு பிரதான சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

10-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 10-வது வார்டில் எம்.ஜி.ஆர். காலனி, தண்ணீர் டேங்க் வீதி, விநாயகர் கோவில் தெரு, பவுண்டு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மேற்கு தெரு, வாரசந்தை வீதி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் தான் நகராட்சி அலுவலகம் அமைந்து உள்ளது.

இதேபோல் இங்கு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம், வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, சமுதாய கூடம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து இருப்பதால், பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருப்பதால் கழிவுநீர் பிரச்சினை குறைவாகவே உள்ளது. இந்த வார்டில் 1,322 ஆண்கள், 1,369 பெண்கள் என மொத்தம் 2,691 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் வெற்றிபெற்றார். இவர் தி.மு.க.வின் மேற்கு நகர செயலாளராகவும், நகராட்சி கொறடாவாகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

அடிக்கடி விபத்து

இந்த வார்டு திருச்செங்கோடு பிரதான சாலையில் உள்ளது. இந்த சாலையில் சேலம் ரோடு கார்னர் முதல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலையின் நடுவே தடுப்புசுவர் சுமார் 4 அடி உயரத்துக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மறுபுறத்தில் வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. மேலும் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை அகலப்படுத்தி நடுவே உள்ள தடுப்புசுவரின் உயரத்தை குறைக்க வேண்டும். இதேபோல் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதுதவிர சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது.

தடுப்புச்சுவர்

இது குறித்து 10-வது வார்டை சேர்ந்த முரளி கூறியதாவது:-

எங்கள் வார்டுக்கு உட்பட்ட திருச்செங்கோடு சாலையின் நடுவே வைக்கப்பட்டு உள்ள தடுப்புச்சுவரால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த தடுப்புச்சுவரின் உயரத்தை குறைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் சேலம் ரோடு கார்னரில் உள்ள சிக்னலால் அடிக்கடி திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைதடுக்க சிக்னல் நேரத்தை குறைக்க வேண்டும். பழனியாண்டி தெரு, ஆண்டவர் பஸ் வீதி உள்ளிட்ட இடங்களில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பவுண்டு தெருவில் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர். காலனி, தண்ணீர் டேங்க் வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாயின் போக்கை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் போதிய திட்டமிடல் இல்லாமல் செய்த பணியால் தானிய கிடங்கு அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பஸ்கள் நின்று செல்லுமா?

நல்லிபாளையம் கிழக்குவீதியை சேர்ந்த சுனிதா:-

நல்லிபாளையம் பகுதியில் 4 மண்சாலைகளை தார்சாலைகளாக மாற்ற வேண்டும். எல்.இ.டி.பல்ப் பியூஸ் போனால் மாற்றுவதற்கு காலதாமதம் ஆகிறது. அதை உடனுக்குடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நல்லிபாளையத்தில் அனைத்து பஸ்களும் நின்று சென்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பஸ்கள் நிற்பது இல்லை. இதனால் ஈரோடு செல்வோர் கலெக்டர் அலுவலகத்திற்கும், இதர பகுதிகளுக்கு செல்வோர் பஸ் நிலையத்திற்கும் ஷேர்ஆட்டோவில் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே அனைத்து பஸ்களும் நல்லிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

இது குறித்து 10-வது வார்டு கவுன்சிலர் சிவக்குமார் கூறியதாவது:-

நான் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த வார்டில் குடிநீர் பிரச்சினை இருந்தது. தற்போது 95 சதவீத பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவர் கட்டி கொடுத்து உள்ளேன். பவுண்டு தெருவில் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து கொடுத்து உள்ளேன். பிள்ளையார் கோவில் வீதி, தானியங்கி கிடங்கு சந்து, தண்ணீர் டேங்க் வீதி உள்ளிட்ட இடங்களில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளேன்.

எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மழை பெய்தால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும். எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுமார் ரூ.33 கோடியில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டு உள்ள தடுப்புச்சுவரின் உயரம் இடைவெளி இருக்கும் பகுதியில் குறைக்கப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் சாலையின் தடுப்புச்சுவரின் உயரத்தை குறைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும்.

இதேபோல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை முறையாக பேணி வருகிறேன். ஒருசில இடங்களில் தார்சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி முழுமை பெறாமல் இருந்து வருகிறது. எனது பதவிக்காலத்திற்குள் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் உதவியுடன் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரின் உயரத்தை குறைக்க வேண்டும்.

2. நல்லிபாளையம் அரசு பள்ளி, நகராட்சி அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

3. நல்லிபாளையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்.

4. தெருநாய் தொல்லை இருக்கக்கூடாது.

5. போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

6. அனைத்து பகுதியிலும் மண்சாலை, தார்சாலைகளாக மாற்றப்பட வேண்டும்.


Next Story