பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றம்-மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டம்
பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கிடையில் மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கிடையில் மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
4 வழிச்சாலை
பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து புளியம்பட்டி வரை நான்கு வழிசாலை அமைக்கப்பட்டு உள்ளது. ராசக்காபாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துக்களை தடுக்க இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாற்றி அமைக்கப்பட உள்ள மின் கம்பங்களில் அடையாள குறியீடு போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மரங்கள் மறுநடவு
பல்லடம் ரோடு ராசக்காபாளையத்தில் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.2 கோடியில் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. சாலை பணிக்கு இடையூறாக 31 மரங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதில் வேம்பு, அரசமரம், ஆலமரம் உள்பட 19 மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, அதே சாலையில் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 12 மரங்களை மட்டும் வெட்டி அகற்றப்படுகிறது.
மேலும் 12 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கு மின்வாரியத்தில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. தற்போது மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மின் கம்பங்களை மாற்றி அமைத்து, பணிகளை தொடங்கி 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.