குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?


குற்ற செயல்களை தடுப்பதற்கு  அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தூத்துக்குடி

குற்ற செயல்களை தடுப்பதற்காக அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

நெல்லை மாநகர அரசு பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த பஸ்களில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாநகர பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு திருடர்கள் அட்டகாசம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில் வாரத்தில் 5 முதல் 10 வரையிலான வழக்குகள், பஸ் பயணத்தின்போது நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாகவே உள்ளன.

எனவே, இதனை தடுக்க அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அடையாளம் காணலாம்

பெண் பயணி வசந்தி:-

பஸ்சில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டியது அவசியம். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இதனால் அடங்கி ஒடுங்கி இருப்பார்கள். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விரைவில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

நெல்லை டவுனை சேர்ந்த பயணி நடராஜன்:-

பஸ்களில் சில நேரங்களில் மது அருந்திவிட்டு சிலர் வருகிறார்கள். அவர்கள் தேவையின்றி கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இது பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தால் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டார்கள்.

பெண் பயணி பொன்னுலட்சுமி:-

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் பெண்கள் எந்த நேரத்திலும் தனியாக பஸ்சில் பயணிக்க முடியும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது நல்ல முயற்சியாக இருக்கும். எனவே, பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.

திருடர்கள் அச்சப்படுவார்கள்

அரசு பஸ் டிரைவர் ராமச்சந்திரன்:-

சென்னையில் மாநகர பஸ்களில் அமைக்கப்பட்டு இருப்பது போன்று நெல்லையிலும் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அரசு பஸ் கண்டக்டர் அய்யப்பன்:-

பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சில நேரங்களில் மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள். அதுவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால் ஜேப்படி சம்பவங்கள் குறையும். அதனை முழுமையாக தடுக்கவும் முடியும். திருடர்கள் குற்ற செயல்களில் ஈடுபட அச்சப்படுவார்கள்.

தென்காசி

தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆர். ஜெயக்குமார்:-

அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியமானதாகும். குறிப்பாக பெண்களுக்கு இது பாதுகாப்பாக இருக்கும். பஸ்களில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களை கண்டுபிடிக்க முடியும். மது போதையில் பிரச்சினை செய்பவர்களை கட்டுப்படுத்த முடியும். சில நேரங்களில் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் பிரச்சினை ஏற்படும்போது கேமராவில் பதிவாகும். பஸ்களில் கேமராக்கள் இருப்பது தெரிந்தால் தவறு செய்பவர்கள் தவறு செய்யும் எண்ணங்களை கைவிடுவார்கள். எனவே கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

4 கேமராக்கள்

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியைச் சேர்ந்த ராமராஜ்:-

அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்த வேண்டும். முகப்பு, பஸ்சின் பின்புறம், உட்புறம் ஆகிய இடங்களில் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதன்மூலம் பஸ்களில் நடக்கும் செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். விபத்துக்கள் ஏற்படும்போது எவ்வாறு ஏற்பட்டது? யார் மீது தவறு? என்பதை கண்டறிந்து மீண்டும் இந்த விபத்து ஏற்படாத அளவில் என்ன செய்யலாம்? என்பது கூட இந்த கேமராக்களின் பதிவுகளை பார்த்தால் முடிவு செய்யலாம்.

நகை, பணம், பொருட்கள் போன்றவை திருட்டு போனால் எளிதில் கண்டுபிடிக்கலாம். கேமராக்கள் பொருத்துவது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் செய்ய வேண்டும்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தங்கமணி நகரை சேர்ந்த சிவா:-

அரசு பஸ்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்போது, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். சாதிய மோதல்களை தடுக்கலாம். குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குற்றங்கள் நடந்தாலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியை போலீசார் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். பொதுமக்களிடம் நகை திருட்டு, பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

படிக்கட்டு பயணம்

தூத்துக்குடி தோப்புத்தெருவை சேர்ந்த எஸ்.அப்துல் மஜீத்:-

அரசு பஸ்களில் மாணவர்கள் பல நேரங்களில் வாசற்படியில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படுகிற அபாயம் உள்ளது. மாணவிகள் கூட படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை உருவாகி விடுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் நகை, பணத்தை திருடி விடுகின்றனர். மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை ஏற்படுகிறது.

இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அந்த பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டால், குற்றவாளிகள் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள். மக்கள் நிம்மதியாக பயணம் செய்ய வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


Related Tags :
Next Story