வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதை தடுக்கநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதை தடுக்கநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சாலையை வாகன காப்பகம் போல பயன்படுத்தி வாகனங்கள் நிறுத்துவது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போலீசாரும் தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சாலையை வாகன காப்பகம் போல பயன்படுத்தி வாகனங்கள் நிறுத்துவது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போலீசாரும் தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வாகன நெருக்கடி

மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு உணவகத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். அந்த சாலையை வாகன காப்பகம் போல பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்த இடத்தில் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றன.

பல நேரங்களில் அங்கு வாகன நெருக்கடி ஏற்பட்டு நீண்ட நேரம் அங்கேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். எனவே அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தேசிய நெடுஞ்சாலையை வாகன நிறுத்தம் போல் பயன்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி, மதுரை மாநகராட்சி கமிஷனர் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதிகாரிகளும் போலீசாரும் பொறுப்பு

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களை வாகன நிறுத்தமாக பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே ஐகோர்ட்டு பல்வேறு வழக்குகளில் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனாலும் தற்போது மனுதாரரும் அதே குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் தான் கண்காணித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க இவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே இது சம்பந்தமாக கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Related Tags :
Next Story