விலை வீழ்ச்சியை தடுக்க ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
விலை வீழ்ச்சியை தடுக்க ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.
விலை வீழ்ச்சியை தடுக்க ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்கேன் எந்திரங்கள்
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 107 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேசியதாவது:-
காவிரியில் மாதாந்திர நீர் பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா வாங்க வேண்டும் என்றால் நுண்ணூட்ட உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். மேலும் விலை பட்டியல் கடைகளில் வைப்பது இல்லை. ஆடுகள் கருத்தரித்தலை கண்டறியும் ஸ்கேன் எந்திரங்களை அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் திருட்டு
பவானிசாகர் அணையில் இருந்து எந்த காரணத்தை கொண்டும் டெல்டா பாசனத்துக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது. பவானி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் திருடும் சமூக விரோதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலிங்கராயன் வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதார விலை
வனஉரிமை சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. வனப்பகுதிகளில் மாடுகள் பட்டி அமைக்க வனத்துறை அனுமதிப்பது இல்லை. இது வன உரிமைச்சட்டத்துக்கு எதிரானது ஆகும். காட்டுப்பன்றிகளால் பழங்குடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கேரளாவை போல காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிறைய விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்காமல் உள்ளது. இது தொடர்பாக முகாம் நடத்த வேண்டும். கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க உடனடியாக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.
நடவடிக்கை
இதைத்தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, 'பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழுவின் முதல்நிலை விசாரணை அறிக்கையின்படி 4 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கு செல்லும்போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பது, தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது கூடாது.
மேலும் உரங்கள் இருப்பு மற்றும் விலை பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும். கால்நடைத்துறை சார்பில் ஸ்கேனிங் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை சார்பில் குறைகேட்பு கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.