திராவிடத்தை பாதுகாக்கவே தி.மு.க.வோடு கைகோர்த்துள்ளோம்-வைகோ பேச்சு
திராவிடத்தை பாதுகாக்கவே தி.மு.க.வோடு ம.தி.மு.க. கைகோர்த்துள்ளது என்று நெல்லையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசினார்
"திராவிடத்தை பாதுகாக்கவே தி.மு.க.வோடு ம.தி.மு.க. கைகோர்த்துள்ளது" என்று நெல்லையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசினார்.
ஆலோசனை கூட்டம்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திறந்த வெளி மாநாடு மதுரையில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக நெல்லை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் (நெல்லை புறநகர்) உவரி ரைமண்ட், (தூத்துக்குடி வடக்கு) ஆர்.எஸ்.ரமேஷ், (தூத்துக்குடி தெற்கு) புதுக்கோட்டை செல்வம், (தென்காசி தெற்கு) ராம.உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி
தி.மு.க. தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி இருக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நீடிக்க வேண்டும். ஏனென்றால் இன்று சனாதன இந்தியாவை உருவாக்குவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா போன்றவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் தமிழ் குறித்து பேசி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
திராவிட மாடலுக்கு எதிராக ஆரியமாடல் ஆட்சியை கொண்டுவர தமிழக கவர்னர் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க.வோடு
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழர்களையும், திராவிட கொள்கைகளையும் பாதுகாத்தனர். ஆனால் இன்று திராவிட கொள்கையை அழித்துவிட கவர்னர் நினைக்கிறார். திராவிடம் என்பது வரலாறு, அது ஒரு தத்துவம், தமிழர்கள் சரித்திரம். இதை யாராலும் அழிக்க முடியாது. திராவிடத்தை பாதுகாக்கவே தி.மு.க.வோடு, ம.தி.மு.க. கை கோர்த்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது. இதுபோன்ற ஆட்சியை நடத்த முடியவில்லை என்று இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நினைக்கின்றன.
மணிப்பூர் சம்பவம்
மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை, இதுகுறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை.
2 இனத்துக்கு இடையே கலகத்தை மூட்டி விட்டு வடக்கு பகுதியில் பா.ஜனதா காலூன்ற துடிக்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பாதுகாப்பாக உள்ளது. இதற்கு திராவிட மாடல் ஆட்சியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சதன் மலைக்குமார், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.