அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணி
அனைவருக்கும் வீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
அனைவருக்கும் வீடு
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், ஊரக பகுதிகளில் அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் தொடக்க நிகழ்ச்சி தேனி அருகே அரண்மனைப்புதூரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த பணி குறித்து கலெக்டர் முரளிதரன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறது. இந்த இலக்கை அடைய ஊரக பகுதிகளில் வாழும் வீடில்லாத தகுதியான குடும்பங்களை கண்டறிதல் அவசியம். இது சம்பந்தமாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வசம் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு-2011, ஆவாஸ் பிளஸ் - 2018, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மறுகணக்கெடுப்பு-2021 மற்றும் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு-2022 ஆகிய விவரங்கள் ஏற்கனவே உள்ளன.
எனினும், இந்த கணக்கெடுப்புகள் யாவும், நிலையற்ற (பிரதானமாக குடிசைகளில்) வீடுகளில் வாழும் குடும்பங்களை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய குடிசைகளில் வாழும் குடும்பங்கள் மட்டுமில்லாமல் நிலைத்த தன்மையற்ற, வாழத்தகுதியற்ற வீடுகளில் வாழும் குடும்பங்களையும் கணக்கெடுத்தல் அவசியம்.
2 பகுதியாக கணக்கெடுப்பு
எனவே, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு அனைத்து ஊராட்சிகளிலும் குக்கிராமங்கள் வாரியாக 2 பகுதிகளாக நடக்கிறது. முதல் பகுதியாக, தற்போதுள்ள 4 கணக்கெடுப்பு பட்டியல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டியல்களில் இடம் பெற்றிருக்கும் குடும்பங்களை ஒரே பட்டியலில் நீடிக்க செய்து, மற்ற பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்து செம்மைப்படுத்தப்பட உள்ளது. 2-வது பகுதியாக, குடிசைகள், நிலைத்த தன்மையற்ற, வாழத்தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பானது கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதி ஆகிய 5 பேர் கொண்ட கணக்கெடுப்பு குழுவால் மேற்கொள்ளப்பட உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், இயற்கை பேரிடர் அல்லது தீ விபத்துகளில் வீட்டை இழந்து தற்போது குடிசைகள், நிலைத்த தன்மையற்ற மற்றும் வாழத்தகுதியற்ற வீடுகளில் வாடகைக்கு வசிக்கும் அனைத்து குடும்பங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவுகளில் குடிசை உள்ளிட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.