வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; உதவி ஆணையர் அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு
திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை முதன்மைச் செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான டாக்டர் அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் தலைமையில், திருச்சி மாவட்டத்தில் தொழிலாளர் துறையின் ஆய்விற்கு உட்பட்ட கடைகள், நிறுவனம், உணவு நிறுவனம். மோட்டார் போக்குவரத்து நிறுவனம், பெட்ரோல் விற்பனை நிலையம், வீட்டு பராமரிப்பு, முடி திருத்தும் நிலையம், ஸ்பா, பாதுகாப்பு சேவைகள், பீடி நிறுவனம், மருத்துவமனை, தியேட்டர் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு, வெளிமாநில தொழிலாளர்கள் சட்டம், விதிகள் குறித்தும், அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நலன்கள் குறித்தும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
சட்ட விதிகள்
மேலும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலையளிப்போர், கீழ்கண்ட சட்டம் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்படி வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயணப்படி, இடமாறுதல் பயணப்படி வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முதன்மை வேலையளிப்பவர் முன்னிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு இருப்பிட வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பான உடைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதி, உணவகம் மற்றும் காப்பகம் வசதி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ன் கீழ், குறிப்பிட்டுள்ள சம்பளத்திற்கு கீழ் குறைவாக சம்பளம் வழங்கக்கூடாது. தமிழ்நாட்டில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தமிழ்நாடு அரசால், வெளிமாநில தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட http://labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.