ஏலத்தில் வாங்கும் சொத்தை பதிவு செய்ய சந்தை மதிப்பில் 11 சதவீதம் செலுத்த வலியுறுத்தும் அரசாணைக்கு தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஏலத்தில் வாங்கும் சொத்தை பதிவு செய்ய சந்தை மதிப்பில் 11 சதவீதம் செலுத்த வலியுறுத்தும் அரசாணைக்கு தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஏலத்தில் வாங்கப்படும் சொத்தினை பதிவு செய்ய சந்தை மதிப்பில் 11 சதவீத தொகையை பதிவுக்கட்டணமாக செலுத்த வலியுறுத்தும் அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ஏலத்தில் வாங்கப்படும் சொத்தினை பதிவு செய்ய சந்தை மதிப்பில் 11 சதவீத தொகையை பதிவுக்கட்டணமாக செலுத்த வலியுறுத்தும் அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏலத்தில் சொத்துகள்

மதுரை அன்புநகரைச்சேர்ந்த வக்கீல் செந்தில் குமரையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஒருவருக்கு சொந்தமான சொத்துகள், பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு, கடன் வசூல் தீர்ப்பாயம், கோர்ட்டு, வருவாய்த்துறை ஆகியவற்றின் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

அவ்வாறு ஏலம் விடப்படும்போது அதில் பங்கேற்று, சொத்துகளை வாங்குபவர், ஏலத்தில் பெற்ற சொத்துக்கான விற்பனை சான்றிதழை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

கடந்த மாதம் 23-ந்தேதி பதிவுத்துறை சார்பில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ஏலத்தில் சொத்தை வாங்கியவர் அதற்கான விற்பனை சான்றிதழை, சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பதிவுத்துறை விதி 89 (2) -ன்கீழ் அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தொகையை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என அந்த அரசாணை கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த அரசாணையின்படி உரிய தொகையை செலுத்தும்பட்சத்தில் சொத்துகளை ஏலத்தில் வாங்கியவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இது ஏற்புடையதல்ல. எனவே ஏல சொத்துகளின் சந்தை மதிப்பில் 11 சதவீத தொகையை பதிவுக்கட்டணமாக செலுத்த வலியுறுத்தும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அரசாணைக்கு தடை

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மீறி நிர்வாக முறையில் விற்பனை சான்றிதழ் பதிவு செய்வதற்கு சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தொகையை பதிவுக் கட்டணமாக வசூலிக்க இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த வழக்கு குறித்து பதிவுத்துறை செயலாளர் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story