ஜனநாயகம், சமூக நீதியை காப்பாற்ற பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த தி.மு.க. தலைமை திட்டமிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த தி.மு.க. தலைமை திட்டமிட்டது.
பயிற்சி பாசறை கூட்டம்
அதன்படி முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி ராம்ஜிநகரில் நேற்று நடந்தது.
இதையொட்டி அங்கு 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய,புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 தி.மு.க. மாவட்டத்துக்குட்பட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார்
இந்தநிலையில் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் கண்டோன்மெண்ட் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபிக்கு சென்றார். அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு ஓய்வு எடுத்த முதல்-அமைச்சர் நேற்று மாலை 4 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வந்தார். கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருப்புமுனை மாநாடு
தி.மு.க.வுக்கும், திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1957-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம். திருச்சி கழகத்தின் கோட்டை மட்டுமல்ல. கழகத்தின் தீரர்கள் கோட்டம் தான் இந்த திருச்சி. 1971-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் நமது கொள்கை முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம். வன்முறையை எதிர்த்து வறுமையை வெல்வோம். இந்தி திணிப்பை என்றும் வெல்வோம். மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி என்ற ஐம்பெரும் முழக்கங்களை கலைஞர் உருவாக்கி தந்தார். திருச்சியில் நடந்த மாநாடுகள் திருப்பு முனை மாநாடுகளாக அமைந்தது.
ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட திருச்சியில் மாநாடு போல் நடந்த பொதுக்கூட்டம் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்த சிறப்பான கூட்டமாக அமைந்தது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாட்டை நடத்தி காட்டியவர் தான் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு. அவரை பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றது என்று பலமுறை கூறி இருக்கிறேன். அத்தகைய பாராட்டுக்கு முழு தகுதி படைத்தவர் தான் நேரு. மிக குறுகிய காலத்தில இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மிக சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் அவர் நடத்தி காட்டி இருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, அவரோடு இணைந்து பணியாற்றிய திருச்சி மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனது நன்றி.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்
15 மாவட்டங்களில் உள்ள 12,645 வாக்குச்சாவடிகளில் இருந்து தலா ஒவ்வொரு பொறுப்பாளர்கள் இங்கு வந்துள்ளீர்கள். பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சிலரை மாற்றவும் சொல்லி இருந்தேன். அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்கள்நியமிக்கப்பட்டு அவர்களுடைய விவரங்களும் சேகரிக்கப்பட்டது. இப்படி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல கட்ட ஆய்வுக்கு பிறகு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை பெற்ற டெல்டா மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டும் இங்கு முதல்கட்டமாக அழைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கான முதல் பயிற்சி கூட்டம் இங்கு நடைபெற்றுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பொறுப்புகள், கடமைகள் குறித்தும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் தெளிவாக எடுத்து கூறி இருப்பார்கள்.
திராவிட மாடல் ஆட்சி குறித்தும், தேர்தல் பணி விதிமுறைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும். கழகம் தொடங்கி 75-வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இந்தநிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் என்ற நிலையை அடைந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். கொரோனா முதல் அலையின்போது, நாம் ஆட்சியில் இல்லை. அந்த நேரத்தில் கழக உடன்பிறப்புகள் சிலரை நாம் இழந்தபோதும் கூட, ஒவ்வொரு பகுதியிலும் நம் கழகமே முழுவீச்சில் இறங்கி நிவாரண பணியில் இறங்கி மேற்கொண்டோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள் தான் அந்த கடமையை செய்துள்ளீர்கள்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
இதேபோல் நாடாளுமன்ற வெற்றிக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர்கள். நாளை நமதே, நாற்பதும் நமதே என உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் முழங்கினேன். கலைஞர் கூறியதைபோல வெற்றி ஒன்று தான் இலக்காக அமைய வேண்டும். வெற்றி அடைவதற்கான வழிமுறைகளில் மிகச்சரியாக நடைபோட வேண்டும். வாக்குச்சாவடி விவரம் சரியாக உள்ளதா?. போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்களா?. இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா? ஆகியவற்றை முழுமையாக சரிபார்ப்பது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முதல்பணி. தினமும் வாக்காளர்களை சந்தித்து நமது சாதனைகளை எடுத்து சொல்வது 2-வது பணி. வாக்களிக்காதவர்களையும், வாக்களிக்க வரவழைப்பது 3-வது பணி. இந்த 3 பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த நீங்கள் வாக்காளர்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொண்டு இருக்க வேண்டும்.
உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கிறது என்று சொன்னால், அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்?. ஒவ்வொரு வாக்காளர் பற்றிமுழுமையாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வாக்காளரின் வயது, குடும்பத்தினர் என்ன படித்திருக்கிறார்கள். என்ன தொழில், எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற முழு விவரமும் இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் இன்று வழங்கப்பட்டுள்ள திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் லத்திட்டங்கள் புத்தகத்தை படித்து பார்த்தாலே அரசின் திட்டங்கள் தெரியும். யாருக்கு என்ன தேவையோ?. அதை கண்டறிந்து பெற்று கொடுங்கள். ஒவ்வொரு வாக்காளரின் தேவையை அறிந்து அரசின் உதவியை செய்து தாருங்கள்.
மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்ற வேண்டும்
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வைக்கிற தகுதியான கோரிக்கைகளுக்கு மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை நான் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பலமுறை கூறினாலும், மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துகிறேன். உங்களுடைய தகுதியான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நான் உறுதிஅளிக்கிறேன். தினமும் வாக்குச்சாவடி பணிகளுக்கென ஒருமணிநேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வீடாக சென்று பேசுங்கள். ஒரு சில வீடுகளில் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். சில வீடுகளில் பட்டும் படாமல் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். அதற்காக நாம் விட்டுவிடக்கூடாது. மீண்டும், மீண்டும் புன்னகையோடு அவர்களை அணுக வேண்டும்.
என்னை பொறுத்தவரை நம்மை நிராகரிக்கக்கூடியவர்களே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை, எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்துகிறோம். எங்களுக்குள் குறைகள், பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியில் எவராலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதோ ஒரு விதத்தில் பயனளிக்கக்கூடிய வகையில் ஆட்சி நடத்துகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
பெண்களுக்கான திட்டங்கள்
ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் போகும்போது ஆயிரக்கணக்கில் சேர்ந்த மனுக்கள் இப்போது குறைந்து நூற்றுக்கணக்கில் தான் சேர்கிறது. அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமை என நினைக்கிறேன். கோடிக்கணக்கான பெண்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டம் தான் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞரின் உரிமைத்தொகையை பெறப்போகிறார்கள். தற்போது 31 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்று வரக்கூடிய ரூ.1,000 முதியோர் உதவித்தொகையை ரூ.1,200 ஆக உயர்த்தி உள்ளோம். 18 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெற உள்ளனர். 13 லட்சம் பெண்களின் நகைக்கடனை நம்முடைய அரசு ரத்து செய்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மக்களும், மண்ணும் செழிக்கிற வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சமூக ஊடகம்
நமக்கு எதிராக அவதூறு, பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றி கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் குறைவு. அவர்கள் பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கட்டும். நாம் திரும்ப, திரும்ப நமது அரசின் திட்டங்களையே பேசுவோம். நம்முடைய அரசின் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கி சொல்லுங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் சுக்குநூறாக நொறுங்கி போகும். இன்றைக்கு சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பரப்புரையாக உள்ளன. வீட்டில், பக்கத்து அறையில் இருந்து கொண்டே வாட்ஸ்அப்பில் பேசி, மெசேஜ் செய்து கொள்கிறார்கள். காலம் அப்படி மாறிவிட்டது. நாம் அனுப்பும் செய்தி நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் பரவும் வசதி வந்துவிட்டது. இதை நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கட்டாயம் கணக்கு தொடங்கி, நம் கொள்கைகள், அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தரக்கூடாது. நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ கவர்னர் நமக்கு பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். ஆக அவரை மாற்ற வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. தேர்தல் வரை அவர் இருக்க வேண்டும். இன்னும் வாக்குகள் நமக்கு அதிகரிக்கும். நமது தொண்டர்படைக்கும், கட்டமைப்புக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே இப்படியொரு கட்சி இருக்கா?. அந்த பலத்தை நாம் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜனதா சிதைத்துவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பா.ஜனதா ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவை, சமூகநீதி, அரசியல் அமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ இருக்கமாட்டார்கள். அத்தனையையும் காலி செய்துவிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இது தான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.
புதிய நாடாளுமன்றத்தில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களின் அடிப்படையில் இருக்கைகள் போட நினைக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரால் மாநிலங்களில் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டுமுறையை முறையாக பின்பற்றி வரும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகும். நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று போனாலும், வடமாநில எம்.பி.க்களை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என கணக்கு போடுகிறார்கள். தமிழகத்தின் குரலை இதன் மூலம் தடுக்க பார்க்கிறார்கள். எனவே தான் இந்த தேர்தல் மிக முக்கியமானது.
இந்தியா கூட்டணி
பல்வேறு தேச மொழியை பேசுபவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி தான் பா.ஜனதா. அந்த ஒற்றை கட்சி தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒற்றை கட்சி அமைந்தால் ஒரே ஆள் கையில் அதிகாரம் போய்விடும். அதனால் தான் இந்த தேர்தலில் பா.ஜனதா வீழ்த்தப்பட வேண்டும். இதற்காகவே 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். 26 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி உள்ளோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான். இதை பிரதமர் மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்க வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து ஏதேதோ பேசுகின்றனர். இந்த நோக்கத்தை இப்போது அல்ல, ஓராண்டு காலமாகவே சொல்கிறேன். அதனால் தான் அவர்களுக்கு என் மீது கோபம். ஆகவே தான் மத்திய பிரதேசத்துக்கு போனாலும் தி.மு.க.வை திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தை திறந்து வைக்க போனாலும் அங்கேயும் தி.மு.க.வை திட்டுகிறார்.
தி.மு.க.வை வாரிசுகளுக்கான கட்சி என பிரதமர் கூறுகிறார். இதைக்கேட்டு, கேட்டு புளிச்சுப்போச்சு. வேறு ஏதாவது கண்டுபிடித்து சொல்லுங்க. நான் சொல்கிறேன் இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசு நாங்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வாரிசுகள் நாங்கள். இதை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பா.ஜ.க. யாருடைய வாரிசு?. கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள். உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?. அப்படி சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?. குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டுகிறது.
எடப்பாடி பழனிசாமி பேசினாரா?
மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்று வரை மணிப்பூரை ஆளும் பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் மணிப்பூர் போலீசும் கைக்கோர்த்து கொண்டு மக்களை தாக்கி கொண்டு இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. பா.ஜ.க.வை ஆளும் மணிப்பூர் எம்.எல்.ஏ. பாவோலியன்லால் ஹாக்கி சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை வேற்றுமைப்படுத்தி அவர்களின் மனதில் மனக்கசப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வு தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. அ.தி.மு.க. பெயரில் இயங்கும் கொத்தடிமை கூட்டத்தில் யாராவது மணிப்பூர் பற்றி பேசினார்களா?. வாய்க்கு வந்ததை பேசுகிறாரே எடப்பாடி பழனிசாமி, அவர் மணிப்பூரை ஆளும் முதல்-அமைச்சரை பற்றியோ, மத்திய பா.ஜ.க. அரசையோ கண்டித்தாரா?. எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசுகிறார்.
ஜனநாயக கட்டமைப்பை காக்க...
சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு, அதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம் போனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. செய்த ஊழலுக்காக தானே அந்த மாநில மக்கள் விரட்டியடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?. அ.தி.மு.க.வினர் மீதான ஊழல் வழக்குகளை காட்டி அவர்களை அடிபணிய வைத்தது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழகத்தில் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆக உரிமைகளை கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்று கைக்கோர்த்து வருகிறார்கள். இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களையும் மணிப்பூராக்கி விடாமல் தடுக்க வேண்டும். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை காக்க வேண்டுமானால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும்.
நமக்கு முன்னால் உள்ள கடமை என்பது மிகப்பெரியது. ஜனநாயக போர்க்களத்தில் முன்னணி படைவீரர்கள் நீங்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்ற தேர்தல் களத்தை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கப்போவது நீங்கள், பணியாற்றப்போவது நீங்கள், உங்களின் ஒருவனானநான் உங்களை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். களம் காணுங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், ரகுபதி, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்.பி., மேயர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், ஸ்டாலின் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு தங்கினார்.