பார்வையற்றோர் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன்; சபாநாயகா் அப்பாவு பேச்சு


பார்வையற்றோர் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன்; சபாநாயகா் அப்பாவு பேச்சு
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:45 PM GMT)

பாளையங்கோட்டையில் பார்வையற்றோர் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் பார்வையற்றோர் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

முன்னாள் மாணவர்கள்

பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பேரவையின் கூடுகை விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களையும், தாங்கள் இங்கு பெற்ற தொழிற்கல்விகள் குறித்தும் பேசினார்கள்.

விழாவுக்கு முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் அப்பாதுரை வரவேற்று பேசினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கல்லூரி அமைக்க...

தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த 2-வது பெரிய பார்வையற்றோர் பள்ளியாக இது திகழ்கிறது. பார்வையற்றோருக்கான இந்த பள்ளியை கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தற்போது ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் பார்வையற்ற மாணவிகள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் பாளையங்கோட்டையில் பார்வையற்றோருக்கான கல்லூரி அமைக்க என்னாலான முயற்சிகளை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ்பால், சங்க துணைத்தலைவர் பாக்கியநாதன், இணைச்செயலாளர் சித்திரை கண்ணன், பொருளாளர் ஆறுமுகம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமலைநம்பி கோவில்

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழமை வாய்ந்த திருமலைநம்பி கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா ஊரடங்கு காலத்தில் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திருமலைநம்பி கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்க வலியுறுத்தி பக்தர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு சபாநாயகர் அப்பாவு எடுத்து சென்றார். தொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்டது. சித்திரை மாத கடைசி சனிக்கிழமையான நேற்று திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வாழ்வாதாரம்

தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக தொன்று தொட்டு நடந்து வரும் எந்த மத வழிபாடாக இருந்தாலும், அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படுத்த கூடாது என்பதிலும், வழிபாட்டிற்கு பாதுகாப்பாக அரசும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணமாகும். கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் கொடை, திருவிழாக்களின்போது தான் மக்கள் மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் இருப்பார்கள்.

விழாக்களில் கிராமிய கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு கோவில் விழாக்கள், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடை விழாக்களுக்கு கோர்ட்டு வரை சென்றுதான் அனுமதி பெற முடிந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடை விழாக்களுக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஸ்வரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், திருக்குறுங்குடி சுரேஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட கலந்து கொண்டனர்.


Next Story