தூத்துக்குடியில், விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு பயிற்சி வழங்கி சாதனை


தூத்துக்குடியில், விபத்தில் சிக்கியவருக்கு  ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு பயிற்சி வழங்கி சாதனை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு பயிற்சி வழங்கி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 6 ஆயிரத்து 148 பேருக்கு விபத்து நேரத்தில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை குறித்த சிறுபயிற்சி வழங்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

முதலுதவி பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில், உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்கள், மற்றும் அலுவலர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக விபத்து மற்றும் காய தடுப்பு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

குறிக்கோள்

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் ஆகும். பல அரசு மருத்துவமனைகள் கிராமப்புற மருத்துவமனைகளில் கூட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமாக மேம்படுத்தப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன. மேலும் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் விபத்து நேரத்தில் செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய சிறு பயிற்சியை 5 ஆயிரம் மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுநல தன்னார்வலர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மாதம் கோவையில் 5 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 ஆயிரத்து 148 பேருக்கு பயிற்சி அளித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

பயிற்சியில் ஒருவர் சாலை விபத்து ஏற்பட்டு விபத்துக்குள்ளானால் அவரை கடந்து செல்லாமல் நாம் ஒவ்வொருவரும் தன்னலமற்ற மனப்பான்மையோடு விபத்துக்குள்ளானவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வரவேண்டும். தமிழ்நாடு அரசு முதலுதவிஅளிப்பவர்களிடம் எந்தவொரு விசாரணையும் செய்யக் கூடாது என்று ஆணையிட்டுள்ளது. எனவே நாம் தயங்காமல் முதலுதவி செய்யலாம். நம் வாழ்நாளில் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், இணை இயக்குநர் (மருத்துவம்) ஜான் போஸ்கோ, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story