மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
விருதுநகரை சேர்ந்தவர் சீனிவாசன். பார்வை குறைபாடுடையவர். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களது மகன் நந்தகுமார், அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டில் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் அருகில் நண்பர்களுடன் விளையாடினார். அப்போது அந்த கட்டிடத்தில் இருந்த சுவிட்ச் பெட்டியில் மோதினார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். இதனால் தனது மகன் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி கடந்த 2019-ம் ஆண்டு சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பள்ளி விடுமுறை நாளன்று தான் சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின் கவனக்குறைவால் தான் விபத்து நடந்தது. இதற்கு அதிகாரிகள் பொறுப்பாக முடியாது என வாதிட்டார்.
விசாரணை முடிவில், மனுதாரர் மகன் இறந்த விவகாரத்தில் இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டதாக ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க கலெக்டரும் பரிந்துரைத்து உள்ளார்.
இந்தத் தொகையை 12 வாரத்தில் பெற்றுத் தர கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.