தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி


தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு   ரூ.4 லட்சம் நிதியுதவி
x

தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பனை மரம் முறிந்து விழுந்து இறந்த சிறுமியின், குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

சிறுமி பலி

தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகள் முத்துபவானி (வயது 1). இவர் கடந்த 4-ந் தேதி வீட்டின் முன்பு தனது அத்தை ராஜேசுவரி (40) என்பவருடன் நின்று பாட்டிலில் வைத்து பால் குடித்துக் கொண்டு இருந்த போது, பலத்த காற்று காரணமாக பனைமரம் முறிந்து விழுந்தது. இதில் சிறுமி முத்துபவானி பரிதாபமாக இறந்தார். அருகில் நின்ற அவரது அத்தை ராஜேசுவரி பலத்த காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

நிதியுதவி

இதைத் தொடர்ந்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் நிதியுதவியை அரசு வழங்கி உள்ளது. இதனால் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இறந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story