பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஷ்ணு உத்தரவு


பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்-  அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஷ்ணு உத்தரவு
x

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்

திருநெல்வேலி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமாக மழை பெய்தால் பணகுடி பகுதியில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும், நம்பியாற்றில் ஏற்படும் வெள்ளமும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் ஆய்வு

அனைத்து பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பொறியாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு செய்து வருகிற 3-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

பழுதுபட்ட மின்கம்பங்கள் ஏதும் காணப்பட்டால் முன்னெச்சரிக்கையாக சரி செய்ய வேண்டும். சாலையில் உள்ள பாலங்களின் அடியில் மழைக்காலங்களில் எந்தவித தடங்கலும் இன்றி மழை நீர் வடிந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அனைத்து பாலங்களையும் உடனே ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

தயார் நிலையில்...

நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை கடந்த பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இந்த ஆண்டு மழைக்கு முன்பாக கால்வாய்களில் அடைப்புகள் ஏதும் காணப்பட்டால் அதை சரி செய்ய வேண்டும்.

பருவமழை காலத்தில் வெள்ள அபாயம் ஏற்படும் போது உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தீயணைப்பு, போலீஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story