செக் மோசடி வழக்கில் பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை
திருச்செந்தூர் கோர்ட்டில் செக் மோசடி வழக்கில் பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
திருச்செந்தூர்:
காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சங்கரேஸ்வரி (வயது 68). இவரிடம் காயல்பட்டினம் ஹெச்.ஏ.டி. தெருவை சேர்ந்த மூசா நெய்னா என்பவரது மனைவி பதருநிஷா (48) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கடனாக ரூ.3½ லட்சம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டு சங்கரேஸ்வரி பலமுறை வலியுறுத்தியும் பதருநிஷா கடனை திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதையடுத்து கடந்த 15.5.2014 அன்றைய தேதியில் ரூ.3½ லட்சத்திற்கான காசோலையை சங்கரேஸ்வரிக்கு, பதருநிஷா கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதுகுறித்து சங்கரேஸ்வரி தொடர்ந்த வழக்கு விசாரணை திருச்செந்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன் இந்த வழக்கு தொடர்பாக பதருநிஷாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், மேலும் ரூ.3½ லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால், கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.