பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு
வெள்ளிச்சந்தை அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தொழிலாளி மனைவி
ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஆண்டார்குளம் ராமபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்சிங், தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53).
சம்பவத்தன்று இவர் ராமபுரத்தில் இருந்து வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர், வீட்டுக்கு திரும்புவதற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
அப்போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஜோதி ரோஸ்லின் அருகில் வந்ததும், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் திடீரென ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜோதி ரோஸ்லின் திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.