தேனி ரெயில் நிலையத்துக்கு கனரக வாகனங்கள் வந்து செல்ல புதிய இணைப்புச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பு


தேனி ரெயில் நிலையத்துக்கு  கனரக வாகனங்கள் வந்து செல்ல  புதிய இணைப்புச்சாலை அமைக்கப்படுமா?  பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

தேனி ரெயில் நிலைய குட்செட் பகுதிக்கு புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு புதிதாக இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி

ரெயில் சேவை

போடி-மதுரை இடையே, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, ஏலக்காய், தேயிலை, பருத்தி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற விளை பயிர்களை கொண்டு செல்வதற்கு இந்த ரெயில் சேவையை ஆங்கிலேயர்கள் தொடங்கினர்.

பின்னர் மாவட்டத்தில் உருவான தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், சரக்கு போக்குவரத்து சேவைக்கும் இந்த ரெயில் பாதை மிகுந்த பயன் அளித்தது.

மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்த இந்த சேவையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சரக்கு போக்குவரத்து

11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் இறுதியில் மதுரை-தேனி இடையே ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. தேனி-போடி இடையே ரெயில் பாதை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் மதுரையில் இருந்து போடி வரை ரெயில் இயக்கப்படும். தற்போது மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் காலை 9.35 மணிக்கு தேனிக்கு வந்தடைகிறது. தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு மதுரைக்கு ரெயில் புறப்படுகிறது.

சரக்கு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில்பாதை என்பதால் தேனி ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் வந்து நிற்பதற்கான ஏற்பாடுகள், அப்பகுதியில் சரக்குகள் இறக்கி வைக்கும் குட்செட் போன்றவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த குட்செட் பகுதிக்கு சரக்கு வாகனங்கள் வந்து செல்வதற்காக ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் தெரு வழியாக பெரியகுளம் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

தற்போது பெரியகுளம் சாலையில் ரெயில்வே பாலம் இல்லை என்பதால் ரெயில் வந்து செல்லும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குட்செட் பயன்பாட்டுக்கு வந்தபிறகு சரக்கு வாகனங்களால் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இணைப்புச் சாலை

சரக்குகளை பெரியகுளம், சின்னமனூர், கம்பம், கூடலூர் மற்றும் கேரள மாநில பகுதிகளுக்கு எடுத்து செல்லும் வாகனங்களும் தேனி நகருக்குள் வந்து செல்லும் என்பதால் நகரில் நெரிசல் மேலும் அதிகரிக்கும். எனவே இந்த நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில் நிலையத்தில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலைக்கு புதிதாக இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இவ்வாறு இணைப்புச் சாலை அமைக்கப்பட்டால் சரக்கு வாகனங்கள் தேனி நகருக்குள் வருவதை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து நெரிசல் எதுவுமின்றி பிற நகரங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.

சரக்கு வாகனங்களின் பயண தூரம், அதனால் ஏற்படும் எரிபொருள் செலவு போன்றவை குறையும். இதன் மூலம் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், தளவாட பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல இயலும்.

எனவே இதுபோன்ற புதிய இணைப்புச் சாலை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது தேனி மக்கள் மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆய்வு பணி

இந்த இணைப்புச் சாலையின் தேவை குறித்து தேனியை சேர்ந்த வர்த்தகர் கே.எஸ்.கே.நடேசன் கூறுகையில், "தேனி ரெயில் நிலையத்தில் இருந்து புறவழிச்சாலைக்கு இணைப்புச் சாலை என்பது அவசிய தேவையாக உள்ளது. தற்போதே தேனியில் வாகன நெரிசல் அதிக அளவில் உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்பதால் இதுபோன்ற இணைப்புச் சாலை திட்டம் அவசியமானது. அரசு இதை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

தேனியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் அய்யப்பன் கூறுகையில், "தேனியில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது. பெரியகுளம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வுப் பணிகள் நடந்துள்ளது. வரும் காலங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டால், தற்போதைய குட்செட் தெரு வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும். புறவழிச்சாலைக்கு ரெயில் நிலையத்தில் இருந்து இணைப்புச் சாலை அமைத்தால் வாகன நெரிசலில் சிக்காமல் கனரக வாகனங்கள் சென்று வர ஏதுவாக இருக்கும்" என்றார்.


Next Story