ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனா்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள சின்ன பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கவின் (வயது 22). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புற பொது பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரெயில், ஈரோடு ரெயில் நிலையம் வந்தபோது அவரது செல்போனை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து அவர், இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரெயில் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கவினின் செல்போனை திருடியது உத்தரபிரதேசம் மாநிலம் பதோகி மாவட்டம் கேட்டல்பர் பகுதியை சேர்ந்த ப்ரடும் பட்டேல் (25), பீகார் மாநிலத்தை சேர்ந்த சசுதீன் ஆலம் (21) ஆகியோர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ப்ரடும் பட்டேல் மற்றும் சசுதீன் ஆலம் ஆகியோரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கவின் உள்பட மொத்தம் 7 பயணிகளிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.