மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் இருந்து பெண்ணாடம் பகுதிக்கு ரகசிய அறை அமைத்து மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநத்தம்,
வாகன சோதனை
சேலத்தில் இருந்து சிலர் மினிலாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றிக் கொண்டு பெண்ணாடம் பகுதிக்கு கடத்தி வருவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் நேற்று வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
ரகசிய அறை
அப்போது லாரியின் பின்புறம் அலுமினிய தகடுகள் மூலம் ரகசிய அறை அமைத்து 65 சாக்கு மூட்டைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பெண்ணாடம் அடுத்த அரிகேரி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மகேந்திரன் (வயது 35), அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தெய்வமணி (25), ராமலிங்கம் மகன் ஆரோக்கியசாமி (33) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் மினிலாரியில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்களை அரிக்கேரி கிராமத்துக்கு கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரிய வந்தது.
போலீசார் தீவிர விசாரணை
அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.