ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
செய்யாறில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் கேவர்சந்த் (வயது 46). இவரது மகன் ரமேஷ்குமார் (23). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வைத்தியர் தெருவில் மளிகை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் மறைத்து வைத்து விற்கப்படுவதாக செய்யாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் செய்யாறு துணை போலீஸ் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மளிகை கடை மற்றும் அருகில் இருந்த குடோனில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுள்ள 5 வகையான புகையிலை போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரமாகும்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேவர்சந்த், அவரது மகன் ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.