இன்று குண்டம் திருவிழா


இன்று குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குண்டம் திருவிழா

கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் சித்திரதேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் 11 அடி அகலமும், 47 அடி நீளமும் கொண்ட குண்டம் அமைக்கப்பட்டது. இதில் 20 டன் விறகுகள் கொண்டு பூ வளர்த்தல் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. மேலும் பூக்குழியில் பல வகையான மலர்களை தூவப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்வு, இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி முக்கோணத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்றனர்.

மகா முனி பூஜை

இதையடுத்து நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. நாளை மறுநாள்(புதன்கிழமை) மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.


Next Story