ஊனம் என்பது உடலில் இல்லை- மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்


ஊனம் என்பது உடலில் இல்லை- மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
x

ஊனம் என்பது உடலில் இல்லை என்பதால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று முதல் மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்.

சேலம்

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...

சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர். 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது. அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

தையல் தொழில்

சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை தலைவர் ஏகலைவன்:-

எனக்கு 13 வயது இருக்கும் போது பெற்றோருடன் சென்னைக்கு சென்றேன். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இடது கால் துண்டானது. ஊனம் அடைந்தாலும் மனம் தளராமல் பள்ளிக்கு சென்று பள்ளிப்படிப்பை முடித்தேன். பிறகு என்னை வளர்த்துக்கொள்ள தையல் தொழில் செய்து கொண்டு தொலை தூரக்கல்வி மூலம் முதுகலை தமிழ் படித்து பட்டம் பெற்றேன். வருமானத்திற்காக பிழை திருத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். 150-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

மாற்றுத்திறனாளிகள் ஏன் வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு செல்லக்கூடாது? என்று நினைத்தேன். அப்போது தனிமரமாக வளராமல், ஆலமரம் போல் வளர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நம்பிக்கை வாசல் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கினேன். தற்போது இந்த அறக்கட்டளையில் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கொரோனா காலத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினோம். அதே போன்று அஸ்தம்பட்டி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்காக பிசியோதெரபி மையம் நடத்தி வந்தோம். தற்போது வாடகை கொடுக்க முடியாமல் தற்காலிகமாக மையம் செயல்படவில்லை. விரைவில் வேறு இடத்தில் மையம் தொடங்குவோம். அயோத்தியாப்பட்டணத்தில் முதியோர் இல்லத்திற்கு இடம் பார்த்துக்கொண்டு உள்ளோம். விரைவில் முதியோர் இல்லம் தொடங்கப்படும். அரசு சார்பில் நிலம் வழங்கினால் முதியோர் இல்லம் அமைத்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்போம். தற்போது 'பசியில்லா சேலம்' என்ற பெயரில் சாலையோர முதியவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு காலை உணவு வழங்கி வருகிறோம்.

திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் மற்றும் உரிமைக்கான சங்க இணை செயலாளர் அமலா ராணி:-

எனக்கு 3 வயது இருக்கும் போது போலியோ தாக்கி ஊனம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருந்து மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி வாழ்வாதாரத்திற்கு போதாது. எனவே 40 முதல் 70 சதவீதம் வரை ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். எனது கணவர் டி.வி. மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு போதுமான வருமானம் இல்லை. எனவே வாழ்வாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மறுமலர்ச்சி அடைய அரசு இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்..

நிதி உதவி போதாது

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் மற்றும் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் ஜான்பெர்னாண்டஸ்:-

போலியோ நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டேன். மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி பெற்று வருகிறேன். இந்த நிதி உதவி போதாது. இதனால் வாழ்வாதாரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக அதிகம் நிதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவரவர் உடலுக்கு ஏற்ற தொழில் தொடங்க வங்கி மூலம் சிரமம் இன்றி கடன் வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு விசாரணை இன்றி கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று மருத்துவ முகாம் நடத்தப்படும். ஆனால் கடந்த பல மாதங்களாக மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் மருத்துவ முகாம் நடத்த வில்லை. வாழ்வில் மறுமலர்ச்சி இல்லாமல் வாழ்ந்து கொண்டு உள்ள என்னை போன்றவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் சைகைமொழிப் பாடம்

உடல் ஊனமுற்றவர்கள், சமுதாயத்தில் ஏளனமாகப் பார்க்கப்பட்டனர். அவர்களின் மனவேதனையை உணர்ந்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்று அடைமொழி கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டினார்.

சமூகநலத்துறையின் கீழ் இயங்கிவந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தார். தற்போது கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்வசம் வைத்துள்ளார்.

அவர் இந்த துறையை ஏற்றவுடன், 'மாற்றுத்திறனாளிகள் இணையற்ற ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையுடனும், சுடர்விடும் அறிவுடனும் விளங்குவதற்கு இந்த துறை தன்னை அர்ப்பணித்து செயல்படும்' என்று உறுதி அளித்தார். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், 'பள்ளி, கல்லூரிகளில் சைகைமொழி பாடம் செயல்திட்டம் ஆக்கப்படும்' என்று அறிவித்திருப்பது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

11,909 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 273 பேருக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளன. இதில் மனவளர்ச்சி குன்றிய 7,395 பேர், கருவிழி குறைபாடு உள்ள 3,125 பேர், தொழு நோய் பாதித்த 1,104 பேர், தசை சிதைவு நோய் தாக்கிய 198 பேர், முதுகு தண்டு வடம் பாதித்த 87 பேர் உள்ளிட்ட மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 909 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. 147 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டு வடம் பாதித்த 47 பேருக்கு சிறப்பு ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறனால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்

அமர் சேவா ராமகிருஷ்ணன் (வயது 69). ஓர் அற்புதமான மனிதநேயர். எந்திர துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தபோது கடந்த 1974-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கடற்படை அதிகாரிகளுக்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்தன. ஆனால் அவர் செயல் இழக்கவில்லை. மனம் தளரவில்லை.

கடந்த 1981-ம் ஆண்டு தென்காசி அருகே ஆய்க்குடியில் `அமர் சேவா சங்கம்' என்ற நிறுவனத்தை தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கு சிகிச்சையும், அடைக்கலமும் அளிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்கூடங்கள், பள்ளிகளையும் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. உடல் உறுப்புகள் இயங்காவிட்டாலும் தனது மனவலிமையினால் இந்த பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவருடன் அவரைப் போன்றே கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளியான சங்கரராமன் அந்த நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். மத்திய-மாநில அரசுகள் இந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இங்கு வந்து ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தென்காசி பகுதிக்கு வரும்போது அமர் சேவா சங்கத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடலில் இருப்பது ஊனம் அல்ல என்பதற்கு அமர் சேவா ராமகிருஷ்ணன் ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறார்.


Next Story