நாகர்கோவில் மேலப்பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இன்று 10-ம் நாள் திருவிழா; மாதா தேர் பவனியில் திரளானவர்கள் பங்கேற்பு
நாகர்கோவில் மேலப்பெருவிளையில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-ம் நாள் திருவிழா நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று மாதா தேர்ப்பவனி நடந்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மேலப்பெருவிளையில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-ம் நாள் திருவிழா நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று மாதா தேர்ப்பவனி நடந்தது.
பங்கு குடும்ப விழா
கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள பழமையான பங்குகளில் நாகர்கோவில் மேலப்பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கும் ஒன்று. இந்த ஆலயத்தின் 10 நாள் பங்கு குடும்ப விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளில் திருவிழா நடந்து வருகிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் திருவிருந்து திருப்பலி
9-ம் நாள் திருவிழாவான நேற்று தியாகத்தின் ஊற்று நற்கருணை, ஜெபமாலைத்தாய் ஜெயம் தரும் தாய் என்ற கருப்பொருளில் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலாரியுஸ் திருப்பலிக்கு தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இந்த திருப்பலியை முதல் திருவிருந்து பெறுபவர்கள் சிறப்பித்தனர்.
மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் ஆடம்பர மாலை ஆராதனை நடந்தது. புனித ஜெரோம் கல்லூரி தாளாளர் சுவக்கின் தலைமை தாங்கினார். இளையோர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றினார். பாடகர் குழு, குடும்ப நலப்பணிக்குழு, கார்மல் அன்னை 3-ம் சபை, கைகள் தன்னம்பிக்கை இயக்கம் ஆகியோர் நேற்றைய திருவிழாவை சிறப்பித்தனர்.
தேர்ப்பவனி
இதைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. தேர்ப்பவனியை ஆலய பங்குத்தந்தை குருசு கார்மல், கேரள மாநிலம் வல்லார்பாடம் பசிலிக்கா அருட்பணியாளர் சுபாஷ் சூசை ஆகியோர் ஜெபித்து, அர்ச்சித்து தொடங்கி வைத்தனர். இயேசுவின் உடலைத்தாங்கிய புனித சிலுவையுடன் கூடிய சிறிய சப்பரம் முன்செல்ல, அதைத்தொடர்ந்து காவல் சம்மனசானவர் சப்பரம், புனித சூசையப்பர் தேர், புனித ஜெபமாலை அன்னை தேர் ஆகியவை அலங்கரிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இந்த சப்பரங்கள் மற்றும் தேர்கள் ஆலயத்தில் இருந்து கோவிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதிகளைச் சுற்றி அதிகாலையில் ஆலயத்தை வந்தடைந்தது. மேளதாளங்கள், செண்டை மேளம் முழங்க, வெகுவிமரிசையாக நடந்த இந்த தேர்ப்பவனியின்போது பங்கு மக்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் புனித ஜெபமாலை அன்னையையும், புனித சூசையப்பரையும் பக்தியோடு வழிபட்டனர். பலர் நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
10-ம் நாள் திருவிழா
10-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. அசிசி பதிப்பக மேலாளர் அருட் பணியாளர் ஜார்ஜ் கிளமெண்ட் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்பணியாளர் பாஸ்டின் துரை மறையுரை ஆற்றுகிறார்.
இதையடுத்து காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு 2 சப்பரங்களும், 2 தேர்களும் ஆலய வளாகத்தை வந்தடைந்ததும் தேர்த்திருப்பலி நடைபெறும். மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், மேலப்பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை குருசு கார்மல் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார்கள். திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கம் நடைபெறும். 10-ம் நாள் திருப்பலியை பங்கு இறைமக்கள், பாம்பன்விளை அசிசி ஆசிரம நவ துறவிகள், மேலப்பெருவிளையைச் சேர்ந்த அருட்சகோதரிகள், பீடச்சிறார்கள், சிறார் பாடகர் குழுவினர் இணைந்து சிறப்பிக்கிறார்கள்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை குருசு கார்மல், புனித சார்லஸ் இல்ல அருட்சகோதரிகள், பங்கு நிர்வாகிகள், பங்கு இறைமக்கள் இணைந்து செய்துள்ளனர்.