இன்று மகா தீபம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை நகரம்


இன்று மகா தீபம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை நகரம்
x

இன்று மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை நகரம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி மகாதீபம் ஏற்றப்படும் கொப்பைரையை நேற்று காலை பக்தர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர்.

12 ஆயிரம் போலீசார்

இந்தநிலையில், இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் திருவண்ணாமலை நகரம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 இணைப்பு சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை போலீசார் நகருக்குள் அனுமதித்து வருகின்றனர்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணி

கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.


Next Story