ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் -டி.டி.வி. தினகரன் பேச்சு
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என மேலூர் அருகே நடந்த விழாவில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
மேலூர்
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என மேலூர் அருகே நடந்த விழாவில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க.
மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அ.ம.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களிடையே வேனில் இருந்தபடியே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கொடநாடு கொள்ளை வழக்கில் அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் நம்மோடு இணைந்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து ஜெயலலிதாவின் இயக்கமான அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.
4 ஆண்டுகளாக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபப்பட்டு தி.மு.க. திருந்தி இருக்கும் என வாக்களித்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு எதற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தீர்கள் என மக்களை வாட்டி வதைத்து தண்டிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடி
ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சரே தெரிவித்திருக்கிறார். அதனால்தான் அவரது துறை மாற்றப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் செ.சரவணன், அ.ம.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளரும், மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் மகன் ஆசையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.