பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம்


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 3 Jan 2023 7:41 PM GMT (Updated: 3 Jan 2023 7:58 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் செங்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 317 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர், உதவியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

நகர்ப்பகுதியில் ஒரு சில இடங்களில் திருமண மண்டபம் போன்ற பொது இடங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களை வரவழைக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் டோக்கனில் எந்த தேதியில் எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு ரேஷன் கடையில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொது வினியோகத்திட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story