வருகிற 1-ந் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு


வருகிற 1-ந் தேதி முதல்    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
x

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

கட்டணம் உயர்வு

திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரமுள்ள, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நான்கு வழிச் சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் நிா்வகித்து வரும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. உயர்த்தப்பட உள்ள கட்டண விவரம் வருமாறு:-

கார், வேன்

கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக ஒருமுறை பயணிக்க ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டு, ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. பல முறை பயணிக்க ரூ.135 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.150 ஆக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,660 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.3,045 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.155 ஆக இருந்த இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் தற்போது ரூ.180 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.235 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.265 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,650-ல் இருந்து தற்போது ரூ.5,330 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

பேருந்து, டிரக்

டிரக், பேருந்து ஒருவழி கட்டணம் ரூ.310 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ,355 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.465 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.535 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.9,305-ல் இருந்து ரூ.10,665 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

பல அச்சு வாகனம், இரு அச்சுகளுக்குமேல் ஒரு வழி கட்டணம் ரூ.500 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.570 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.750-ல் இருந்து ரூ.855 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.14,950 வசூலிக்கப்பட்டது, தற்போது ரூ.17,140 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ.1000 ஆகவும், உள்ளூர் வாகன கட்டணம் வகை ஒரு மாதாந்திர பாஸ் ரூ.150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ.300 என மாற்றமின்றி வசூலிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story