கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி


கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
x

கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

கடன் தள்ளுபடி

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது பேரவை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளம் வந்தால் சேதத்துக்கு நிவாரணம் வழங்குவது வழக்கம். ஆனால் இந்தியாவில் முதல் முறையாக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய வரலாறு நடந்தது. அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து கடன் தள்ளுபடி செய்வது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்தபோது தேர்தலுக்கு முன்பே கடன் தள்ளுபடி செய்தார்.

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கடன் தள்ளுபடிக்கான தொகையை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். படிப்படியாக 2 தவணை வழங்கப்பட்டு உள்ளது.

சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது

விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அப்போதுதான் வெள்ள சேதாரம் இல்லாமல் பயிர்களை அறுவடை செய்ய முடியும். விவசாயிகள் வேண்டுகோளை நாங்களும் வலியுறுத்துகிறோம். எனவே வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.

தேங்காய் விலை ரூ.13-ல் இருந்து ரூ.8 ஆக குறைந்து இருப்பதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கொப்பரை தேங்காய்களை கூடுதலாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

ஈரோடு சத்தி ரோட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோபி அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கக்கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு. எனவே கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது. மக்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story