கோவை ஓட்டல்களில் தக்காளி சட்னி ரத்து


கோவை ஓட்டல்களில் தக்காளி சட்னி ரத்து
x
தினத்தந்தி 30 Jun 2023 1:30 AM IST (Updated: 30 Jun 2023 1:17 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியதால் ஓட்டல்களில் தக்காளி சட்னி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் உணவு பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியதால் ஓட்டல்களில் தக்காளி சட்னி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் உணவு பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தக்காளி விலை உயர்வு

தக்காளி... சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இல்லாத சமையல், உப்பில்லாத இல்லாத பண்டம் போன்றது. இந்த தக்காளி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்துதான் தமிழகத்துக்கு அதிகம் வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் தக்காளி பாதிக்கப்பட்டதால், அதன் வரத்து மிகவும் குறைந்தது.

இதன் காரணமாக சராசரியாக ரூ.30 வரை விற்ற தக்காளி கிடுகிடுவென உயர்ந்து ரூ.100-ஐ தாண்டி உள்ளது. ஓரிரு நாட்களில் அதன் விலை சதமடித்துவிட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சமையலில் தக்காளியை அதிகம் சேர்த்து வந்த நிலையில் தற்போது, பெயருக்காக மட்டுமே தக்காளியை சேர்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தக்காளி சட்னி ரத்து

இந்த விலை உயர்வு இப்போது ஓட்டலிலும் எதிரொலித்து உள்ளது. கோவையில் உள்ள ஓட்டல்களில் தக்காளி சட்னி தாராளமாக கிடைத்து வந்தது. குறிப்பாக தள்ளுவண்டி ஓட்டல், சிறிய சிறிய ஓட்டல், வடை கடைகளில் தக்காளி சட்னி இல்லாமல் இருக்காது. சில கடைகளில் தக்காளி சட்னி சுவையாக இருப்பதால் அதற்காகவே சிலர் அந்த கடைகளுக்கு செல்வது உண்டு. இந்த நிலையில், தக்காளியின் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டதால், சிறிய ஓட்டல்கள், வடை கடைகளில் தக்காளி சட்னி ரத்து செய்யப்பட்டு விட்டது.

உணவு பிரியர்கள் ஏமாற்றம்

அதுபோன்ற ஒருசில கடைகளில் தக்காளி சட்னி, தக்காளி கூட்டுகளும் கொடுப்பது இல்லை. இதன் காரணமாக தக்காளி கூட்டு, சட்னிக்காக குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று வரும் உணவு பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து உணவு பிரியர்கள் கூறும்போது, சிறிய அளவிலான ஓட்டல்களில் இட்லி, தோசைகளுக்கும் மற்றும் வடை கடைகளில் தக்காளி சட்னி கொடுப்பார்கள். தக்காளி சட்னி வைத்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும். இப்படி சாப்பிட்டு பழகிவிட்டு, தற்போது தக்காளி சட்னி, கூட்டு இல்லாமல் சாப்பிடும்போது ஒருவித ஏமாற்றம் ஏற்படுகிறது. எனவே தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். கோவையில் சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருபவர்களிடம் கேட்டபோது, நாங்கள் குறைந்த விலைக்கே உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இதனால் ரூ.100-க்கு தக்காளி வாங்கி, சட்னி வைத்தால் லாபம் கிடைக்காது. மேலும் மாலை நேர வடை கடைகளில் தினசரி வருமானமே ரூ.500 முதல் ரூ.1000 மட்டுமே கிடைக்கும். இதில் கிலோ ரூ.100-க்கு தக்காளி வாங்கி சட்னி வைத்தால் வருமானம் பாதியாக குறைந்துவிடும். எனவே தக்காளி சட்னிக்கு பதிலாக தேங்காய் சட்னி வழங்கி வருகிறோம் என்றனர்.

அசைவ உணவில் தக்காளி

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் சங்கத்தில் பதிவு பெற்று 300 ஓட்டல்கள் உள்ளன. இதுதவிர பதிவு செய்யாமல் ஏராளமான ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறிய ஓட்டல்களில் தக்காளி சட்னி, கூட்டு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சைவ ஓட்டல்களில் தக்காளி கூட்டு வழங்குவது இல்லை. ஆனால் அசைவ உணவில் தக்காளியை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதால், விலை உயர்ந்தாலும் தக்காளியை பயன்படுத்தி வருகிறோம் என்றனர்.

இது குறித்து கோவையை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரிகள் கூறும்போது, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன் தக்காளி வரும். தற்போது 30 டன் தக்காளியே வருகிறது. கர்நாடகாவில் தண்ணீர் கிடைக்காமல் தக்காளி செடி கருகிவிட்டதால் அதன் வரத்து குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம். தக்காளி விலை பழைய நிலைக்கு வர குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்றனர்.


Next Story