தக்காளி காய்ச்சல்: தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்


தக்காளி காய்ச்சல்: தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்
x

கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது.

கோவை,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதில் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ள தாக தெரிகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தக்காளி காய்ச்சல் அதிகம் பாதிக்கிறது.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் வலி, சோர்வு, கை கால் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் தோலில் சிவப்பு நிறதடிப்புகள் ஏற்படுவதால் தக்காளி காய்ச்சல் என்கின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் இருக்கும் தக்காளி காய்ச்சல் தமிழகத்தில் பரவும் வாய்ப்பு உள்ளதால் தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக -கேரள எல்லை பகுதியில் உள்ள வாளையார், வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் கோபாலபுரம், ஆனைக்கட்டி உள்பட 13 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், ஆனைகட்டி சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதனை செய்கின்றனர்.

மேலும் ஆனைக்கட்டி வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய சுகாதார குழு அமைக்கப்பட்டது. அவர்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சென்று யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளதா? என்று கண்காணித்து வருகின்றனர்.

இதில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவு றுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story