தஞ்சையில், ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை


தஞ்சையில், ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 27 Jun 2023 1:05 AM IST (Updated: 27 Jun 2023 4:41 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. விளைச்சல் சரிவால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. விளைச்சல் சரிவால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

கிலோ ரூ.100

காமராஜர் மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறியஅளவிலான தக்காளி கிலோ ரூ.80-க்கும், அதற்கு அடுத்த ரக தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி சமையலில் முக்கிய இடம் வகிப்பதால் எப்போதுமே மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்கி சென்றனர். நேற்று ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் தக்காளி வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. தக்காளியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதில் விலை குறைந்த காய்கறிகளை வாங்கி சென்றனர். இதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி சென்றனர்.

வியாபாரி கருத்து

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தஞ்சைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும் தக்காளியின் விளைச்சலும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருக்கிறது. காய்கறி வாங்க வருபவர்கள் தக்காளியின் விலையை கேட்டு சற்று யோசித்த பின்னரே குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர். மற்ற காய்கறிகளை விட சமையலுக்கு தக்காளி முக்கியமானது என்பதால் எப்போதும் கிலோ கணக்கில் வாங்குபவர்கள், தக்காளியை தவிர்க்க முடியாமல் ½ கிலோ, ¼ கிலோ என்று சில்லறை கணக்கில் வாங்கி சென்றனர் என்றார்.


Next Story