ஊட்டியில் தக்காளி விலை உயர்வு


ஊட்டியில் தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 19 Jun 2023 10:15 PM GMT (Updated: 19 Jun 2023 10:15 PM GMT)

வரத்து குறைவால் ஊட்டியில் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி

ஊட்டி

வரத்து குறைவால் ஊட்டியில் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உழவர் சந்தை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டது.

தக்காளி விலை உயர்வு

இதனால் ஊட்டிக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நேற்று நாட்டு தக்காளி கிலோ ரூ.44-க்கும், ஊட்டி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ஊட்டிக்கு தினமும் 2,000 கிலோ தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தால், விலை குறைய வாய்ப்பு இல்லை. இதனால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். மேட்டுப்பாளையத்தில் தக்காளி விலை அதிகமாக இருப்பதால், தற்போது மைசூரில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் கத்தரிக்காய் கிலோ ரூ.54-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.75-க்கும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விலை விவரம்

உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-

வெண்டைக்காய்-ரூ.50, பெரிய வெங்காயம்-ரூ.22, அவரைக்காய்-ரூ.70, புடலங்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.50, சுரைக்காய்-ரூ.24, பாகற்காய்-ரூ.60, கொத்தவரை-ரூ.30, பூசணிக்காய்-ரூ.20, அரசாணிக்காய்-ரூ.24, உருளைக்கிழங்கு-ரூ.45, கேரட்-ரூ.50, பீட்ரூட்-ரூ.35, முள்ளங்கி-ரூ.28, நூல்கோல்-ரூ.28, முருங்கைக்காய்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story