நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நாளுக்கு நாள் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரையிலும் 1 கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் பின்னர் 80, 90, 100 என விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ராமநாதபுரம் பகுதியில் தக்காளி 1 கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை வெகுவாகவே குறைத்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விற்பனையும் பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தக்காளி வாங்கி கொண்டிருந்த சாந்தி கூறியதாவது:- தக்காளியின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பு 300 ரூபாய் கொண்டு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வோம். ஆனால் தற்போது தக்காளி வாங்குவதற்கு மட்டுமே 200 ரூபாய் வரை தேவைப்படுகின்றது.
நடவடிக்கை தேவை
கூலி வேலைக்கு சென்றாலே ஒரு நாளைக்கு சம்பளம் ரூ.450தான் வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி இருக்கும்போது தக்காளியின் விலை இப்படி இருந்தால் மற்ற காய்களை எப்படி வாங்க முடியும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை பார்த்துள்ளோம். சில நாட்களில் தங்கத்தின் விலை கூட குறைந்து வருகின்றது. ஆனால் தற்போது தங்கத்தை விட தக்காளியின் விலை தான் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களுக்கு தேவையான தக்காளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது, தக்காளியின் தொடர் விலை உயர்வு காரணமாக அதன் விற்பனை பாதியளவு குறைந்துவிட்டது. சராசரியாக 2 கிலோ தக்காளி வாங்குபவர்கள் தற்போது அரை கிலோ வாங்கும் நிலைக்கு வந்து விட்டனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் தான் தக்காளி விற்பனையும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்றார்.