தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்; கிலோ ரூ.100-க்கு விற்பனை


தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்;  கிலோ ரூ.100-க்கு விற்பனை
x

தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி வரத்து குறைவு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகின்றன.

குறிப்பாக ஈரோடு மார்க்கெட்டிற்கு தாளவாடி, சத்தியமங்கலம், கோலார் போன்ற பகுதியில் இருந்து தினந்தோறும் 15 டன் தக்காளி வரத்தாகி வந்தது. ஆனால் சமீப காலமாக தொடர்ந்து வரத்து குறைந்து வருகிறது. நேற்று வெறும் 4 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது.

ரூ.100-க்கு விற்பனை

கடந்த மாதம் ரூ.30-க்கு விற்பனையாகி வந்த தக்காளி படிப்படியாக விலை உயர்ந்து கடந்த வாரம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. நேற்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை ஆனது.

தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சாம்பார், சட்னி உள்ளிட்ட எந்த வகை குழம்பு வைத்தாலும் தக்காளி முக்கியம் என்பதால் பெண்கள் சிரமப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி வரத் தொடங்கினால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

-------------------


Related Tags :
Next Story