வரத்து அதிகரிப்பால் சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை சரிவு-ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கும், வெளி மார்க்கெட்டிற்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.
அதாவது ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், குறைந்த அளவில் மட்டுமே தக்காளியை வாங்கி சென்றனர். மேலும், விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது.
விலை சரிவு
இந்நிலையில், தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், மேச்சேரி, வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் இருந்தும் சேலம் மார்க்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தக்காளி விலை தற்போது படிப்படியாக விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி சென்றனர். இனிவரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அதன் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.