தக்காளி விலை கிடுகிடு உயர்வு


தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

பெரம்பலூர்

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்தது, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பெரம்பலூரில் தக்காளி கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் சில்லரை விற்பனையும் அதிகரித்து உள்ளது.

ரூ.120-க்கு விற்பனை

மளிகை கடைகளில் தக்காளி கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாலையோரத்தில் சரக்கு வாகனத்தில் வைத்து விற்கப்படும் தக்காளி 1¼ கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகள் இல்லாததால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்காளி சட்னி நிறுத்தம்

தக்காளி விலை உயர்வின் காரணமாக பெரம்பலூரில் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக பீன்ஸ், கேரட் விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பொதுவாக இந்த கால கட்டத்தில் ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் தக்காளி அதிகளவில் வரும். ஆனால் அவற்றின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம். அதுபோன்று பிற காய்கறிகளின் வரத்தும் குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து இருக்கிறது. கத்தரி கிலோ ரூ.80, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.80 என்று விற்பனையானது. காய்கறிகளின் தேவைக்கு ஏற்ப அதன் வரத்து இல்லை. ஒரு வாரத்தில் இந்த விலை உயர்வு சரியாகிவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story