தக்காளி விலை கிடு கிடு உயர்வு


தக்காளி விலை கிடு கிடு உயர்வு
x

பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து உள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டு பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பாலக்கோடு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகியது.

விலை உயர்வு

இதனால் கோடை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1000 முதல் ரூ.1,300 வரையும், 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரை ரகத்திற்கு ஏற்றார் போல் விற்பனையானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story