கடலூரில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு


கடலூரில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு
x

வரத்து குறைவு எதிரொலியால் கடலூரில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுகளில் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. இங்கு கடலூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

இந்த மார்க்கெட்டுகளுக்கு உள்ளூரில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரட், பீன்ஸ், சவ்சவ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு

தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் குறைந்து விட்டது. இதன் காரணமாக தக்காளி வரத்தும் குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் வரை கிலோ ரூ.40, ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்த காய்கறி கடையில் ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80, ரூ.82, ரூ.84 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கிலோ 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைகோஸ் நேற்று ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில காய்கறி கடைகளில் தக்காளி இல்லை. இருக்கும் கடைகளிலும் சிலமணி நேரத்திற்குள் விற்று தீர்ந்து விடுகிறது.

தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஒரு கிலோ வாங்கும் இடத்தில் தற்போது ¼ கிலோ அளவுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது. சமையல் செய்வதில் தக்காளி முக்கிய பங்கு வகிப்பதால், அதனை தவிர்க்க முடியாமல் இல்லத்தரசிகள் தக்காளியை வாங்கி செல்கின்றனர். எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story