கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 May 2023 12:30 AM IST (Updated: 19 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

8 டன் தக்காளி

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 8 டன் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதியில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும் சூழ்நிலையில் சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்ததால் தற்போது கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய் வரை ஏலம் போனது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 23 ரூபாய்க்கு தக்காளி ஏலம் போனது. இது இந்த மாத தொடக்கத்தில் விற்பனையான தக்காளியை காட்டிலும் ஒரு கிலோவிற்கு 17 ரூபாய் அதிகமாகும்.

தக்காளி விலை கடந்த 2 மாதங்களை காட்டிலும் நேற்று கிடுகிடுவென உயர்ந்து ஏலம் போனதால் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை

இதனால் தற்போது சில்லறை விலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரைக்கும் விற்பனையாகி வருகிறது. 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் தக்காளிகளை வாங்கும் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் காய்கறிகளில் ஒரு சில காய்கறி விலையைத் தவிர மற்ற காய்கறி விலைகள் குறைவாக காணப்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் கத்திரிக்காய் (ஒரு கிலோ) 45 ரூபாய்க்கும், முள்ளங்கி 21 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 20 ரூபாய்க்கும், பீட்ரூட் 16 ரூபாய்க்கு ஏலம்போனது. வெண்டைக்காய் விலை தொடக்கத்தில் காலையில் 15 ரூபாய்க்கு தொடங்கி மாலையில் விலை வீழ்ச்சி அடைந்து 8 ரூபாய்க்கு விற்பனையானது. பாகற்காய் 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 40 ரூபாய்க்கும், புடலங்காய் 15 ரூபாய்க்கும், அவரைக்காய் 16 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


Next Story