மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை திடீர் உயர்வு-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.
மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.
தக்காளி விலை அதிகரிப்பு
மதுரையில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை கடுமையாக குறைந்து இருந்தது. அதாவது 15 கிலோ எடைகொண்ட பெட்டியின் விலை ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே இருந்தது. அதன்படி, ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை இருந்தது. ஆனால், நேற்று திடீரென தக்காளியின் மொத்த விலை கடுமையாக உயர்ந்தது. அதன்படி, நல்ல தரத்துடன் உள்ள தக்காளி பெட்டியின் விலை ரூ.600 முதல் ரூ.800 வரை சென்றது. அதன் மூலம் ஒரு கிலோ தக்காளியின் விலை மொத்த மார்க்கெட்டில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. இதுபோல், சில்லரை விலையில் தரத்தை பொறுத்து தக்காளியின் விலை ரூ.80 வரை விற்பனையானது. இதுபோல், மிளகாயின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகாய் ரூ.130 முதல் வரை ரூ.150 வரை சென்றது. சில்லரை விலையில் ரூ.180 வரைசென்றது.
மழை காரணம்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த தக்காளிகள் அழுகி விட்டதால், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாகவே விலை அதிகரித்துள்ளது. பொதுவாக, மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு 12 வாகனங்களில் தக்காளிகள் கொண்டு வரப்படும். ஆனால், நேற்று 6 வாகனங்களில் மட்டுமே தக்காளி வந்துள்ளது. வரத்தும் வெகுவாக குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது. மேலும், கல்லூரி, பள்ளிக்கூடங்கள் திறந்ததாலும், பக்ரீத் பண்டிகையை காரணமாகவும் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.