செவ்வாய்பேட்டையில்50 கிலோ தக்காளி திருட்டுமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
சேலம்
சேலம் செவ்வாய்பேட்டையில் 50 கிலோ தக்காளியை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தக்காளி வியாபாரம்
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.100-யை தாண்டி விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி நேற்று கிலோ ரூ.135 வரை விற்பனை செய்யப்பட்டது.
சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட்டு பகுதியில் உள்ள சாலையோரத்தில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சிவகாமி (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை அங்கேயே பாதுகாப்பாக சாக்கு பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்குள் தூங்க சென்று விட்டார்.
திருட்டு
இந்தநிலையில் நேற்று அதிகாலை சிவகாமி எழுந்தவுடன் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். அப்போது அங்கு 2 பெட்டிகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தக்காளியை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிவகாமி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளியை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.