தக்காளி விலை குறைந்தது


தக்காளி விலை குறைந்தது
x

ஊட்டியில் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஊட்டி உழவர் சந்தை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 4 வாரங்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது. ஊட்டி மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தக்காளி கிலோ ரூ.70, ரூ.80, ரூ.90 என விலை அதிகரித்து வந்து, கடந்த வாரம் சதம் அடித்தது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.50-க்கு விற்பனை

இந்தநிலையில் தற்போது தமிழகம், கர்நாடகா உள்பட தென்மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் கோவை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டு தக்காளி படிப்படியாக விலை குறைந்து தற்போது கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் தக்காளி விலை மேலும் குறையலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். நீலகிரியில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டாலும் மற்ற காய்கறிகள் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story