தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
x

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.25 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.25 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஏழைகளின் ஆப்பிள்

சமையலுக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் தக்காளியும் ஒன்று. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. அதிலும் ஏழை வீட்டு பெண்கள் வெறும் தக்காளியை மட்டும் வைத்தே குழம்பு தாயார் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு சமையலுக்கு தக்காளி முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், தக்காளி விலையோ கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியின் விலை வெறும் 7 ரூபாய் தான். ஆனால் தற்போது மெல்ல மெல்ல விலை உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.75-க்கு விற்பனை ஆனது.

சதம் அடித்த தக்காளி

இந்தநிலையில் வியப்பூட்டும் விதமாக குமரி மாவட்டத்தில் முக்கிய சந்தையான நாகர்கோவில் கனகமூலம் சந்தையில் கடந்த 2 நாட்களில் தக்காளி விலை ரூ.25 அதிகரித்து நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுபற்றி சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "வடசேரி சந்தைக்கு ஒசூரில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதிலும் தற்போது மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மேலும் குறைந்தது. அதே சமயம் தக்காளியின் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

இல்லத்தரசிகள் கவலை

தக்காளி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். ஏற்கனவே கியாஸ் விலை உயர்வு இல்லத்தரசிகளை வெகுவாக பாதித்து உள்ளது. இப்படி ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போனால் நாங்கள் என்ன தான் செய்வது? என்று இல்லத்தரசிகள் புழம்புகிறார்கள்.

நாகர்கோவில் வடசேரி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

பீன்ஸ்-ரூ.100, சின்ன வெங்காயம்-ரூ.30, பல்லாரி-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.35, மிளகாய்-ரூ.40, கத்தரிக்காய்-ரூ.30, தடியங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.30 என்ற அளவில் விற்பனை ஆனது.


Next Story